2024 ஆம் ஆண்டில் நாட்டின் 75வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி, கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து நாட்டு அதிபர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அவர் கலந்து கொண்டார்.
அந்த வகையில், வரும் 2024 ஆம் ஆண்டின் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்தியா அழைத்திருந்தது.
கடந்த மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டையொட்டி நடந்த குவாட் தலைவர்கள் கூட்டத்தில், அடுத்த குவாட் தலைவர்கள் மாநாட்டை இந்தியா நடத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வதற்கும், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் இந்தியாவின் அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொள்வதைப் பற்றி அமெரிக்கா இதுவரை உறுதியளிக்காமல் இருந்தது.
இந்த நிலையில், 2024 ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு திட்டமிட்ட தேதியில் நடைபெறாது எனவும் கூறப்படுகிறது. தற்போது பரிசீலனையில் உள்ள தேதிகள் அனைத்தும் குவாட் தலைவர்களுடன் பொருந்தாத காரணத்தினால் மாற்றுத் தேதிகளை ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.