320 ஐ.எஸ். தீவிரவாதிகளைக் கொன்ற ‘ஷேக் ஆஃப் ஸ்னைப்பர்’ கொல்லப்பட்டார்!
உலகின் பல நாடுகளில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் பொறுப்பேற்கும்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ‘ஷேக் ஆஃப் ஸ்னைப்பர்’ கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபு தஹ்சின் அல் ஷாலி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1973ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு - இஸ்ரேல் யுத்தங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, தீவிரவாதிகளைக் கொன்று குவித்தவர்.
வயது முதிர்ந்த காலத்திலும் தொங்கும் தாடியுடன், ஒரு மோட்டார் பைக், ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வலம்வந்தவர் இவர்.
63 வயதான அபு, 2003ஆம் ஆண்டு அமெரிக்கா சதாம் உசேனை வீழ்த்திய பொழுது அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் 173 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், தனது கணக்கு தற்போது 320ஆக கூடியிருப்பதாகவும் ஒரு காணொளிப்பதிவில் அபு தெரிவிக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு ஈராக் பகுதியான ஹவிஜாவில் ஐ.எஸ். படைகளுக்கு எதிரான அரசு படைகளின் தாக்குதலில் அபுவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அபு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரது நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.
- ச.ப.மதிவாணன்