கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.
பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு எஸ். ராஜேந்திரன் என்பவர் அனுப்பியுள்ளார். அதில், எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜீயர் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.