இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். இந்த வீட்டின் உரிமையாளரான ஃபஸீலத்துல் ஜமீலா என்பவர் தனது சகோதரர் முகமது ஜாவித் மூலமாக நேற்று (18.08.2024) நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடமும் இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார்.
அதில், “தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சுமார் ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதனையடுத்து தன்னிடம் சொல்லாமலேயே யுவன் சங்கர் ராஜா வீட்டை காலி செய்துவிட்டுச் சென்று விட்டார். இதன் மூலம் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தத்தை மீறியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன்னை பற்றிய அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜாவின் வக்கீல் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நோட்டீஸீல், “சிவில் உரிமை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை குற்றவியல் ரீதியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவே வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலா தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் ரீதியாகவும், சிவில் உரிமையியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.