Skip to main content

திருப்பதி லட்டைச் சுற்றும் சர்ச்சை; சத்தியம் செய்ய சந்திரபாபு தயாரா? - ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
YSR Congress Rebuts Chandrababu Naidu Statement About Tirupati Laddu

இந்தாண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி வருகிறார்.

அந்த வகையில், ஜெகன் மோகனின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் பேசும் முதல்வர் சந்திரபாபு நாயுடு,  “திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில். இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன். இதனைச் சரிசெய்ய வேண்டியது நமது ஒவ்வொருத்தரின் கடமை” என்று தெரிவிக்கிறார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமையான் கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு கொடுக்கப்படும். உலகம் முழுவதும் திருப்பதி கோயிலுக்கு இருக்கும் அதே மவுசு, அங்கு கொடுக்கப்படும் லட்டிற்கும் இருக்கிறது. இந்த நிலையில் அதில் நெய்க்குப் பதில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், “சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தியுள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது.

எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம்.   சந்திரபாபு சத்தியம் செய்ய தயாரா...?" என்று கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்