தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லை நீண்ட தூரம் கொண்டது. திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி மாவட்டம் வரை தமிழகம் – ஆந்திரா எல்லையுள்ளது. இந்த எல்லையோரம் பல்வேறு கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் நடப்பது காவல்துறையினக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்டம் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது. வேலூர் மாவட்ட மிகப்பெரியது. அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை போன்ற வேலூர் தொகுதிகளின் பல்வேறு கிராமங்கள் ஆந்திரா மாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எல்லையோரத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சுவது, செம்மரம் வெட்டுவது, விலங்குகளை வேட்டையாடுதல், குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் வந்து பதுங்குவது என பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு குற்றங்களை தடுத்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை தடுக்க முடியாமல் வேலூர் போலீஸார் தவித்து வந்தனர்.
அதற்கு காரணம், தமிழக போலீஸ் பிடிக்க வந்தால் ஆந்திராவுக்குள் ஓடி தப்பிப்பது, ஆந்திரா போலீஸ் விரட்டினால் தமிழக பகுதிக்குள் ஓடிவந்து பதுங்குவது என ஆட்டம் காட்டிவருகின்றனர். குறிப்பாக பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் என்கிற காட்டுப்பகுதியை கூறலாம். இது இரண்டு மாநில எல்லையில் உள்ள பகுதியாககும். பரந்த விரிந்த இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் பலவுள்ளன. இந்த கும்பல்களை பிடிக்க செல்லும்போதே அவர்களுக்கு தகவல் சென்றுவிடுவதால் யாரையும் பிடிக்க முடியாமல் சாராயம் காய்ச்சி வைத்துள்ள ஊரல், பானை, ட்ரம் போன்றவற்றை மட்டும்மே கைப்பற்றி வந்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் பேரணாம்பட்டு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான இளம் போலீஸ் டீம், சாத்கர் காட்டுப்பகுதிக்குள் தைரியமாக உள் நுழைந்து சுமார் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊரலை கைப்பற்றி அழித்துள்ளனர். அங்கிருந்த பானைகளை உடைத்த இளம் போலீஸ் டீம், சாராயம் காய்ச்சி இரண்டு பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறது.
சாராயம் காய்ச்சும் நபர்கள் யார், யார் ?, எங்கெல்லாம் அனுப்பப்படுகிறது, விற்பனை செய்பவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள்.