திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயசீலன். இவர் தனது நிலத்தின் ஒருபகுதியில் மாட்டு கொட்டகை அமைத்து 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்துவருகிறார்.
கடந்த மே 5ந் தேதி விடியற்காலை பசுவின் மடியில் இருந்து பால்கறக்க ஜெயசீலன் சென்றபோது, ஒரு மாடு காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். கயிறு அறுத்துக்கொண்டு எங்கேயாவது மேய்ச்சலுக்கு போய்விட்டதா தேடிப்பார்த்தபோது தோல்வியே மிஞ்சியது. தனது மாடு திருடு போய்விட்டதாக களம்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் தந்தார்.
இதே களம்பூர் காவல்நிலையத்தில், கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் பசுமாடு சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஜெயசீலனுக்கு தெரியவந்தது. இதேபோல் வடமாதிமங்களம் பகுதியிலும் சில மாடுகள் திருடு போனதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாடு திருடன் யார் என போலீசாரும், மாட்டை பறிகொடுத்த விவசாயிகளும் தேடிவந்தனர்.
போளூர் அடுத்த கேளுரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். மாடுகளை திருடியவர்கள் இப்படிப்பட்ட சந்தைகளில் தான் வந்து விற்பார்கள் என்பதால் ஜெயசீலன் சந்தைக்கு சென்று தனது மாடு விற்பனைக்கு வந்துள்ளதா என தேடினார். அப்போது, அவரது மாட்டை, டாட்டா ஏசி என்கிற குட்டியானை வண்டியில் ஏற்றுவதை தெரிந்து, அருகில் சென்று பார்த்தபோது, அங்கு சிலருடன், அவர் ஊரான களஸ்தம்பாடியை சேர்ந்த விநாயகம் என்பவனை பார்த்து ஆச்சரியமானவர். பின்பு மாடு வாங்கியவர்களை விசாரித்தபோது அவர்கள், இவர் தான் விற்றார் என விநாயகத்தை காட்டியுள்ளனர். அவரிடம் கேட்டபோது, சரியாக பதில் சொல்லவில்லையாம்.
அவர் போய் கேட்டபோது, இது என்னோட மாடு என மிரட்டலாக சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியானவர், இது என்னோட மாடு திருடி வந்து விற்கிறான் என சத்தம் போட்டு சண்டைபோட, சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் கூடி அவனிடம் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். இதனால் விவசாயிகள் ஒன்றுகூடி அவரையும், அவருடன் இருந்த இருவரையும் அடித்து உதைத்து அங்கிருந்த புளியமரத்தில் கட்டிப்போட்டனர். இதுப்பற்றிய தகவல் களம்பூர் போலீசாருக்கு சொல்லப்பட அவர்கள் வந்து இவர்களை மீட்டு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.
விசாரணை பற்றி போலீசார் நம்மிடம் கூறும்போது, ‘விநாயகமும், இவனது மாமனார் வேலூர் பென்னாத்தூரை சேர்ந்த கன்னியப்பனுக்கும் மாடு திருடி விற்பது தான் தொழிலே. விநாயகம் மாடு திருடிவருவான், மாடு விற்பனை புரோக்கராக உள்ள கன்னியப்பன், மாட்டை விற்பான். திருடிய மாட்டை வண்டியில் ஏற்றிச்செல்வது ராஜேஷ். இவன்கள் சுத்துவட்டாரங்களில் மாடு திருடியவன்கள் என தெரியவந்துள்ளது’ என்கிறார்கள்.