நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.
இந்த மாநாடு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜய் மூன்று முறை கடிதங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு பல்வேறு வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் வைத்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக குழந்தைகள், சிறுவர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வயதானவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் மாநாட்டை பார்க்கலாம். மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட இளைஞர்கள் இருவர் வாகன விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் இருந்து ஏராளமான பேருந்துகளில் தொண்டர்கள் மாநாட்டுக்கு சென்று வரும் நிலையில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் பகுதியில் தவெக கொடியுடன் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் தலைக்கவசம் பழைய அணியாத நிலையில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ஒரு இளைஞருக்கு பின்னந்தலையில் ரத்தம் வழிந்த நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.