கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து நீர்நிலைகளில் மாணவர்கள், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் அடுத்துள்ள புரசை கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (17). இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக அருகில் உள்ள வளத்தூர் கிராமத்திலிருந்த குளத்தில் நீந்தச் சென்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த குளமானது தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் இருப்பதால் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த உமாபதி இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்த பொழுது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக குளத்தில் தேடி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் உமாபதியின் உடலைக் கண்டெடுத்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடலானது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.