புதுச்சத்திரம் அருகே பட்டதாரி இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்ற ஒருதலைக் காதலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கடந்தப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியியல் பட்டதாரி. இவருடைய தந்தை சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அதையடுத்து கோமதியும் அவருடைய தாயாரும் மட்டும் வசித்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகன் கவுதம்(42). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கோமதி, இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கவுதமிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர், தான் அந்த இளம்பெண்ணை காதலித்து வருவதாகக் கூறியுள்ளார். அதேநேரம் கோமதி அவரைக் காதலிக்கவில்லை என்பதும், கவுதம் அவர் மீது ஒருதலையாக காதல் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர். அவரும் வியாபாரம் தொடர்பாக கரூருக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், கோமதிக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்து ஆத்திரம் அடைந்த கவுதம், மே 8 ஆம் தேதி காலை, கடந்தப்பட்டியில் உள்ள கோமதியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டார்.
அவரை தாக்கியதுடன், தான் சட்டைப் பையில் தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோமதியின் கழுத்தில் கட்ட முயன்றார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கவுதமை தடுத்து நிறுத்தி, வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். காயம் அடைந்த கோமதி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கவுதமை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒருதலைக் காதலால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வாலிபர் கட்டாயத் தாலி கட்ட முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.