தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகே உள்ள ஜெயம் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். 39 வயதான இவர், சொந்தமாக ஒர்க் ஷாப் ஒன்றை வைத்து மெக்கானிக் தொழிலைச் செய்து வருகிறார். இந்நிலையில், முருகேசனுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும், தனது மெக்கானிக் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார்.
இத்தகைய சூழலில், முருகேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையைத் தீர்த்து வைப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் முருகேசனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளந்தமிழன் என்கிற தமிழன் முருகேசன் தட்டிக்கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் முருகேசனுக்கும், இளந்தமிழனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்து, அது தகராறில் முடிந்ததாகவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழன், முருகேசனை பழி வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் முருகேசன் தன்னுடைய வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேவாரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பர்னிச்சர் கடைக்கு வந்துள்ளார். அப்போது, இதைத் தெரிந்துகொண்ட தமிழன், இருசக்கர வாகனத்தில் முருகேசனை பின் தொடர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த பர்னிச்சர் கடைக்கு வந்த தமிழன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விறுவிறுவென கடைக்குள் ஓடியுள்ளார்.
அந்த நேரத்தில், இதை எதிர்பாராமல் நின்றுகொண்டிருந்த முருகேசனை, தமிழன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதனால் முருகேசனுக்கு முதுகு மற்றும் முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் கத்தியுடன் வந்த தமிழனை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, கடையை விட்டு வெளியே சென்ற தமிழன், அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.
இத்தகைய சூழலில், படுகாயமடைந்த முருகேசனை மீட்டு போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பர்னிச்சர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட இளந்தமிழன் என்கிற தமிழனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பட்டப் பகல் நேரத்தில் கடைக்குள் புகுந்து அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.