கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் திருநாளைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஓசூர் கோபசந்திரத்தில் இன்று எருது விடும் விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து போட்டிக்காக மாடுகள், மாடுபிடி வீரர்கள் என ஏராளமானோர் கோபசந்திரத்திற்கு குவிந்திருக்கின்றனர். ஆனால் எருது விடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி கிடைக்க தாமதமானதால், இன்று காலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சலையின் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் அவர்கள் சாலையின் நடுவே கற்கள், மரப்பலகைகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் எருது விடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி அனுமதி வழங்கியிருக்கிறார். கோபசந்திரத்தில் எருது விடும் போட்டி நடத்த நேற்று இரவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், ஆனால் அந்த அரசாணையை இன்று சொல்வதற்குள் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.