கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த குருபட்டி கிராமத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இந்தப் போட்டியின்போது குருபட்டியைச் சேர்ந்த மோகன்பாபு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திலக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் மோகன்பாவுவை திலக் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலையில் திலக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த திலக் மோகன்பாபுவின் தந்தையான திம்மராயப்பாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 12ம் தேதி அன்று ஓசூர் பெரியார் நகரில் உள்ள டீக்கடையில் திலக் டீ குடித்துக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திலக்கை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர்.
திலக் ஏற்கனவே திம்மராயப்பாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மாவட்ட எஸ்.பி. உடனடியாக மத்திகிரி இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்.ஐ. சிற்றரசு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஓசூர் நகர போலீஸார் திம்மராயப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மகனை கொலை செய்தவரை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. மேலும், திம்மராயப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஒரே மகனை கொலை செய்துவிட்டு கொலையாளி வெளியே சுற்றியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கூலிப்படையைச் சேர்ந்த பலரை நாடினேன். ஆனால், அனைவரும் மறுத்துவிட்டார்கள்.
பிறகு மத்திகிரியைச் சேர்ந்த ஜிம் டிரெய்னர் சசிகுமார் என்பவரை தொடர்புகொண்டு 20 லட்சம் ரூபாய் விலைபேசி முன்பணமாக 2 லட்சம் ரூபாயை வழங்கினேன். சசிகுமார் என் உறவினர். அவர் மூலம் எனது உறவினர்களான சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோரைக் கொண்டு திலக்கை கொலை செய்ய முடிவு செய்தோம்.சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் திலக்கை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வழக்கமாக அவர் தினமும் டீ குடிக்கும் டீக்கடையில் திட்டமிட்டபடி கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்தனர்” என ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் திம்மராயப்பா, சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரை ஓசூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர். ஜிம் டிரெய்னரான சசிகுமாரை தேடிவந்த நிலையில், சங்ககிரி நீதிமன்றத்தில் சசிகுமார் சரணடைந்துள்ளார். திம்மராயப்பா உள்ளிட்ட கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.