Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்ற தாய்!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

youth passed away police arrested his mother

 

திருச்சி, வயலூர் ரோடு சீனிவாச நகரில் வசித்து வருபவர்கள் பத்மநாபன், புனிதா. இந்தத் தம்பதியின் மகன் விஜயராகவன் (27). இவர், கடந்த 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்ஜினியரிங் மெக்கானிக்கல் பிரிவு பட்டதாரியான இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட படுகாயங்களுடன் உயிரற்ற நிலையில் கிடந்தார். 


தகவல் அறிந்து அங்கு விரைந்த உறையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


இதில், விஜயராகவனின் தாயிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தனது மகன் விஜயராகவன் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்பொழுதெல்லாம் அவரை காப்பாற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அவரின் வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.


அதனால், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், மனநலம் பாதிக்கப்பட்ட விஜயராகவன் தினமும் தன்னை அடித்து உதைத்து டார்ச்சர் செய்து வந்ததால், மனவேதனையுடன் வாழ்ந்ததாகவும் சம்பவத்தன்று இரவு தன்னை அடித்து உதைத்ததால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளால் மகனின் பின்னந்தலையில் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து புனிதாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்