Skip to main content

சென்னையில் பரவலாக மழை!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Widespread rain in Chennai!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (19.05.2024) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (20.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Widespread rain in Chennai!

இந்நிலையில் சென்னையின் மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதன்படி அசோக் நகர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மேற்கு மாம்பலம், அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, எம்.ஆர்.சி.நகர், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் (21.05.2024) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்