நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இன்று இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ராகுல்காந்தியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் பிரச்சார பேரணி நடத்த திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் காண ஏராளமான தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்தனர். அப்போது பிரச்சார மேடையின் மீது ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் ஏரியதை கண்ட தொண்டர்கள் போலீசார் வைத்திருந்த பாதுகாப்பு வளையங்களை மீறிய மேடையை நோக்கி முன்னேறிவந்தனர், இருவருடனும் கை குலுக்குவதற்கும் புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர்.
தொடர்ந்து ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் தொண்டர்களை அமைதி காக்குமாறு கை அசைத்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை எல்லாம் கேட்காமல் தொண்டர்கள் மேடையை முற்றுகையிடும் அளவிற்கு குவிந்தனர். இறுதியாக மேடையில் ஆலோசனை நடத்திவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ளாமல் மேடையில் இருந்து இறங்கி திரும்பி சென்றனர்.