Skip to main content

பெண் கொடுக்க காதலியின் பெற்றோர் மறுப்பு; விரக்தியில் ஓடும் ரயில் முன்பு  பாய்ந்து இளைஞர் தற்கொலை! 

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Youth passed away in namakkal

 

காதலியின் பெற்றோர், திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த இளைஞர், ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் விஜயன் (22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், உள்ளூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கும் இவர் மீது காதல் இருந்துள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்ட காதலி, தன் பெற்றோரிடம் நேரில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார்.

 

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரிடம் சென்று, திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டுள்ளார். அதற்கு காதலியின் பெற்றோர் மறுத்து விட்டதோடு, அவரையும் கண்ணியக்குறைவாக பேசியிருக்கிறார்கள். இது தொடர்பாக விஜயன் பெற்றோருக்கும், காதலியின் பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் பெற்றோர், இனி தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டோம்; வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விஜயன், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். 

 

இதையடுத்து அவர், மார்ச் 24ம் தேதி நள்ளிரவு, சேலம் - கரூர் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் மோதியதில் அவருடைய உடல் இரு துண்டுகளாக சிதறியது. சேலம் ரயில்வே காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் விஜயனின் உறவினர்கள் புதன்சந்தை - சேந்தமங்கலம் சாலையில் அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விஜயனின் சாவுக்கு பெண் வீட்டார்தான் காரணம் என்றும், அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கூறி மறியலில் ஈடுபட்டனர். 


இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ், சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


சடலத்தின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தபிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு சமாதானம் அடைந்த விஜயனின் உறவினர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தற்கொலை சம்பவமும், அதைத் தொடர்ந்த சாலை மறியல் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்