நாமக்கல் அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிளஸ்2 மாணவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள மண்கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் சசிகுமார் (27). நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூல் செய்யும் முகவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 26, 2023) வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மறுநாள் அதே ஊரில், அலங்கானத்தம் செல்லும் சாலையில் கரட்டுப்பகுதியில் சசிகுமார் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய எருமப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக மண்கரடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ்குமார் (23), மணி மகன் சீனிவாசன் (33), ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
தினேஷ்குமாரும் சசிகுமாரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில், தினேஷ்குமாரின் தாத்தா பிச்சைக்காரனுக்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட அடிதடி மோதலில் சசிகுமார் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தினேஷ்குமாரின் குடும்பத்தினர் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சசிகுமார், நீதிமன்ற விசாரணைக்கு வராமல் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தினேஷ்குமாருக்கு அவர் மீது வன்மம் இருந்து வந்தது.
இது ஒருபுறம் இருக்க, சீனிவாசன் மனைவி கவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சசிகுமாருக்கும் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த சீனிவாசன், தனது மனைவியையும் சசிகுமாரையும் பலமுறை கண்டித்துள்ளார். அதன்பிறகும் அவர்கள் சந்திப்பது தொடர்ந்து வந்ததால் உள்ளூரில் இருந்து நாமக்கல்லுக்கு சீனிவாசன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். இதனால் சீனிவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கவிதா அவரை விவாகரத்து செய்துவிட்டார். தன் குடும்பத்தைக் கெடுத்து மனைவி பிரிந்து செல்லவும் சசிகுமார்தான் காரணம் எனக் கருதிய சீனிவாசன் அவரை பழிதீர்க்க மனதுக்குள்ளேயே கருவிக்கொண்டு இருந்தார்.
இது மட்டுமின்றி, சீனிவாசனின் உறவினர் பெண்கள் சிலருக்கு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி அவர்களுடனும் சசிகுமார் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த சீனிவாசன், இனியும் சசிகுமார் உயிரோடு இருந்தால் பல குடும்பங்களைச் சீரழித்துவிடுவான் என்று கருதி அவரை தீர்த்துக்கட்ட எண்ணினார். இது குறித்து ஏற்கனவே முன்விரோதம் காரணமாக சசிகுமார் மீது கோபத்தில் உள்ள தினேஷ்குமாரிடம் தன் திட்டத்தைக் கூறினார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப தினேஷ்குமாரும் சீனிவாசனும் ஒன்று சேர்ந்து சசிகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்கு துணையாக உள்ளூரைச் சேர்ந்த நித்தீஷ்குமார் (19), விக்கி என்கிற விக்னேஷ் (20), 17 வயதான பிளஸ்2 மாணவன் ஆகியோரையும் அழைத்துக் கொண்டனர்.
இதையடுத்து, சம்பவம் நடந்த பிப்ரவரி 26ம் தேதி, கடன் பெறுவது தொடர்பாகப் பேச வேண்டும் என்று சசிகுமாரிடம் நைச்சியமாகப் பேசி அவரை தங்கள் இடத்திற்கு வரவழைத்துள்ளனர். தன்னை கொல்வதற்குதான் வலை விரித்துள்ளனர் என்பதை அறியாத சசிகுமார், அவர்களின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சீனிவாசன், தினேஷ்குமார், சசிகுமார் ஆகிய மூவரும் மது குடித்துள்ளனர். அவருக்கு போதை ஏறிவிட்டதை அறிந்த அவர்கள், தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சசிகுமாரை கொலை செய்ததாக தினேஷ்குமார், சீனிவாசன், நித்தீஷ்குமார், விக்னேஷ் மற்றும் 17 வயது பிளஸ்2 மாணவன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் பிப்ரவரி 28ம் தேதி கைது செய்தனர். அவர்களை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை மட்டும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.