இரண்டு கால்களையும் இழந்த நிலையில் இழப்பீடு கேட்டு சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், ஆம்புலன்சில் வந்து திண்டுக்கல் எஸ்.பி. ரவளி பிரியாவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா சித்தூர் கல்குவாரியில் ஒப்பந்த வேலை செய்து வருகிறார்கள்.
அவர்கள் மூலம் அங்கு பாறைகளில் துளை போடும் பணியில் சேர்ந்தேன். கடந்த 2020 நவம்பர் மாதம் 20 ஆம் தேதி பாறை விழுந்ததில் நசுங்கிய எனது இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்றினார்கள். ஆனால் கல்குவாரி ஒப்பந்ததாரர்களிடம் இழப்பீடு கேட்டோம் அவர்கள் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கல்குவாரி வந்தால் இழப்பீடு தருவதாகக் கூறினர்.
இதுவரை இழப்பீடு தரவில்லை மாறாக என் மீதும் என் உறவினர் மீதும் கன்னிவாடி போலீஸில் புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. இனிகோதிவ்யன் சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.