கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் 18 வயது லோகேஷ். இவர் பிளஸ் டூ படித்து முடித்துள்ளார். மேல்படிப்புக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் நீண்ட நாட்களாக இயங்கவில்லை. இதனால் தனது குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உழைத்து சம்பாதித்து அதை குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை ஒன்று உள்ளது.
லோகேஷ் அந்த கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தினமும் சென்று வேலை செய்து வந்துள்ளார். பஞ்சர் கடையில் நேற்று ஒரு லாரி டயருக்கு பஞ்சர் ஒட்டினார் லோகேஷ். பின்னர் ஒரு லாரியில் டயரை பொருத்தி காற்று பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. அந்த டயரில் இருந்து இரும்பினால் ஆன வளையம் எகிரி வந்து லோகேஷின் தோள்பட்டையில் விழுந்தது. இதனால் லோகேஷ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக கொண்டு சென்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.