கோவையில் காரில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதை அடுத்து தீபாவளி நேரம் என்பதால் தமிழக முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு பலத்தப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், கடைத்தெருக்கள் எனப் பல்வேறு இடங்களில் இரவு பகலாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்ட்ராங், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தின் உள்ளே புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் அருகே செல்லும் சாலையில் திடீரென பெட்ரோல் குண்டு வந்து விழுந்து அதிக சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது புதிய கட்டிடத்தின் மாடியில் இருந்து மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் கொண்டு வீசி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விக்கிரவாண்டி நகரில் உள்ள வாணியர் தெருவைச் சேர்ந்த காத்தவராயன் என்பவரது மகன் பாலு(39) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.