தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவையொட்டி அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். வெளியிடப்படும் நாணயத்தில் கலைஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாணயம் வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துளளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், 'நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம்' தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கலைஞர் எப்பொழுதும் நாட்டம் கொண்டிருந்தார். நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர். அப்படிப்பட்ட கலைஞரின் நினைவு நாணயம் வெளியீட்டு விழா மகிழ்ச்சி அளிக்கிறது' என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏற்கனவே, கலைஞரின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தமிழக முதல்வர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.