சேலத்தில், சிறுமியிடம் கிளி ஆசை காட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். மாட்டுப் பொங்கலன்று, பலகாரம் செய்வதற்கான பொருள்களை வாங்கி வருவதற்காக, அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்றிருந்தாள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். தன் வீட்டு மொட்டை மாடியில் கிளிகள் வளர்த்து வருவதாகவும், வீட்டுக்கு வந்தால் கிளிகளை பிடித்துக் கொடுப்பேன் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பி வாலிபரின் வீட்டுக்குச் சென்ற சிறுமியிடம் திடீரென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தச் சிறுமி, அங்கிருந்து அழுது கொண்டே தப்பி ஓடிச்சென்றுவிட்டார். இது குறித்து சிறுமி தன் தாயிடம் நடந்த விவரங்களை அழுதவாறே கூறியிருக்கிறாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர், சேலம் அல்லிக்குட்டை வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்த காமராஜ் (45) என்பதும், அவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
விசாரணையின்போது, சிறுமியிடம் தான் தவறாக நடக்க முயற்சி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து காமராஜ் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கரோனா பரிசோதனைக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.