திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 31 வயதான சுபாஷ் சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பணிமாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மோசடி மன்னனாகச் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள செளந்தர்ராஜன் மனைவி சென்னையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவிக்கு திருவண்ணாமலைக்கு இடமாறுதல் வேண்டி தெரிந்தவர்கள் மூலமாக சுபாஷை சந்தித்துள்ளார் செளந்தர்ராஜன். தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு இடமாறுதல் வேண்டும் என்றால் 2 லட்சம் செலவாகும் என பேரம் பேசியுள்ளார். இவரும் ஒப்புக்கொண்டுள்ளார். செளந்தர்ராஜன் மனைவிக்கு எந்த சிபாரிசும் இல்லாமல் போளூருக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது. அவரும் இங்கு வந்து பணியில் சேர்ந்துள்ளார்.
என்னால்தான் இடமாறுதல் கிடைத்தது. அதனால் எனக்கு பணம் தரவேண்டும் என சுபாஷ் செளந்தர்ராஜனை மிரட்டியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசானிய லிங்கம் அருகே அமைந்துள்ள யாத்திரிகா நிவாஸ் தங்கும் விடுதியில் வந்து தங்கிய சுபாஷ், விடுதியில் வைத்து செளந்தர்ராஜனிடம் பஞ்சாயத்து பேசியுள்ளார். அங்கு சில இளைஞர்களும் வந்துள்ளனர். சத்தம் அதிகமாக இருந்ததால் விடுதி பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். செளந்தர்ராஜனும் தன் பங்குக்கு புகார் தந்துள்ளார்.
அங்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார், சுபாஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அண்ணாமலையார் கோவிலுக்கு வரக்கூடிய ஆன்மீக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியில் சுபாஷ் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ரூம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் மீது சென்னை, திருவள்ளூர் என பல இடங்களில் மோசடி வழக்குகள் உள்ளன என்பதும், கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இடத்துக்கு தகுந்தாற்போல், ஆளுக்கு தகுந்தாற்போல் அரசு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, பத்திரிகை நிருபர், தொலைக்காட்சி நிருபர், போலீஸ் நிருபர் என பல பெயர்களில் மோசடி செய்ய அதற்காகவே அடையாள அட்டைகளையும் உருவாக்கி வைத்துள்ளார். ஆதார் அட்டைகளும் உருவாக்கி வைத்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகனை போல சுபாஷும் விதவிதமான பெயர்களில் விதவிதமாக பொதுமக்களை ஏமாற்றியிருக்கிறார். இவர் மீது திருவண்ணாமலையிலும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.