கரூர் அடுத்த தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவர் மகன் சஞ்சய் (23). சஞ்சய், தனது தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். சஞ்சய், ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றி பெற்றதால் அதற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சய் ஐடி-யை யாரோ ஹேக்செய்து ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றதால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30,000 வரை எடுக்கப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் "கேமுக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க என்ன மாதிரி ஏமாறாதீங்க, எதாவது சாதிங்க" என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், தாய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலை இல்லாததால் கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்ததாகவும், அதற்கும் சரிவர செல்லாததால் அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சஞ்சய் நேற்று (ஜூன் 6ம் தேதி) மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல்துறையின் விசாரணை முடிந்த பிறகே சஞ்சய் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.