மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும், மூலிகை பெட்ரோல் சோதனை தொடர்பான ரகசியங்களையும் வெளியிடுவேன். ஆனால், அதற்கு முன்பாக மரணத்தின் விளிம்பில் நின்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார். அவர் தனது வீடியோ பதிவில், ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன். இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது. 10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.