இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8 பேரைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பணத்தையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பைனான்ஸியர் மூர்த்தி. இவர் தொளசம்பட்டி போலீசாரிடம், ‘இன்ஸ்டாகிராம் மூலம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரஷீதாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் பியூட்டீசியனாக பணியாற்றி வருகிறார். நாளடைவில் எங்களது பழக்கம் காதலாக மாறியதால், கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி இருவரும் ஓமலூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்பு இருவரும் 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி காலையில் இருந்து ரஷீதாவை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் பணம், 4 பவுன் நகைகளையும் காணவில்லை. அதனால் தனது காதல் மனைவி ரஷீதாவை கண்டுபிடித்துத் தரும்படி’ புகார் அளித்தார். இதனிடையே ரஷீதாவிடம் பழகியதால் தனது மனைவியையும் மூர்த்தி விவகாரத்து செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், ரஷீதாவின் சமூக வலைத்தளப் பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெயர்களில் கணக்குகள் வைத்துக்கொண்டு, வசதியான ஆண்களைத் தன் காதல் வலையில் சிக்க வைத்துத் திருமணம் செய்துகொண்டு, பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாயமான ரஷீதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி கோவையில் பெண் ஒருவர், ‘எனது கணவர் சத்ய கணேஷ் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என்று மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட தொளசம்பட்டி போலீசார், அந்த வழக்குடன் மூர்த்தியின் வழக்கை ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டு பெண்ணும் ஒருவர்தான் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்பு விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், மூர்த்தி போன்று 8 பேரை ரஷீதா திருமணம் செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரஷீதாவை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.