கொங்கு மண்டலத்தில் பதட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பொன்காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான சாமி சிலைகளை நள்ளிரவில் முகமூடி அணிந்த ஒரு கும்பல் கடப்பாரை, சுத்தியல், கோடாரி மூலம் உடைத்து நொறுக்கியது. இதனால் அக்கோயிலை குலதெய்வமாக வழிபடும் ஒரு சமூகத்தின் ஒரு பிரிவினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சிலை உடைப்பு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கடையடைப்பு, மறியல் என போராட்டங்களும் நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் சில நாட்களில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்தான் இன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரளாக வந்து மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு மனு கொடுத்தனர் .
பிறகு அவர்கள் கூறும் போது, "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருப்பவர் சூரியமூர்த்தி. இவர் பாதிப்புக்குள்ளாகும் கொங்கு பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள், மக்களை திரட்டி போராட்டங்கள் என கொ.ம.தே.க. கட்சி மூலம் செய்து வருகிறார். சமீபத்தில் சிவகிரியில் சாமிசிலைகள் உடைப்பு சம்பவம் நடந்தது. இந்த கோவில் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்ததற்கு கொ.ம.தே.க இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்திதான் காரணம் என்று அடையாளம் தெரியாத சிலர் தொலைபேசி மூலம் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மேலும் வெளியூர் ஆட்கள், கூலிப்படை மூலம் மிகப் பெரிய சதி திட்டம் தீட்டி வருவதாகவும் எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் சூரியமூர்த்தியின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது எனவேதான் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்திக்கும், அவரது குடும்பத்தினருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என எஸ்.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்." என்றார்கள். இளைஞர் அணி செயலாளர் உயிருக்கு ஆபத்து என போலீஸ் எஸ்.பி.யிடம் அந்த அமைப்பினர் கொடுத்த மனுவால் மீண்டும் கொங்கு மண்டலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.