இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் காமாட்சி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த 48 வயது தயாளன் என்பவர் போலி மருத்துவர் என்பது அப்பகுதி இளைஞர்களின் புகாரால் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் அது உண்மை என தெரியவந்து போலி மருத்துவர் தயாளன் கைது செய்ய மாவட்ட மருத்துவ தொடர்பு அதிகாரி கீர்த்தி காவல்நிலையத்தில் புகார் தந்தார். அதனை தொடர்ந்து பாணாவரம் போலிஸார் தயாளனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தயாளன் அந்த பகுதியில் நீண்ட வருடங்களாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவர் போலி மருத்துவர் என்பது அப்பகுதி வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தெரிந்தும் எந்த புகாரும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஏழை, படிக்காத பாமர மக்களிடம் நான் ஒரு பெரிய மருத்துவர் எனச்சொல்லிக்கொண்டு கிளினிக் நடத்திக்கொண்டு இருந்து வந்துள்ளார் தயாளன் என்பது குறிப்பிடத்தக்கது.