ஈரோடு மாவட்டம் மைல்கேல்பாளையம் ஆலமரத்தூர் ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி ஜவகரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “நான் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். எனக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நான் பட்டியலினச் சமூகத்தை சேர்ந்தவர். வேலைக்கு செல்லும்போது எங்கள் ஊரில் உள்ள மூலக்கல் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் அளிக்கும் தகவல் மூலம் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொடுப்பேன். கடந்த ஒரு மாதங்களாக நான் கள்ளிப்பட்டி வளையபாளையம் காலனியில் உள்ள எனது அம்மா வீட்டில் தங்கியிருந்தேன்.
இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அந்த நபர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, கள்ளிப்பட்டிக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்றதும் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறினார். அதையடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி அவருடன் சென்றேன். கோபி அருகே சென்றபோது எங்கு அழைத்து செல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, என்னை சாதி பெயரை சொல்லி மிரட்டி ஈரோடு அருகே உள்ள தோட்டத்து வீட்டில் அடைத்தார். அங்கு மதுபோதையில் அவருக்கு தெரிந்த 3 பேர் வந்தனர். அப்போது, எங்களுடன் அனுசரித்துப் போகவில்லை என்றால் என் கணவரையும், மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
பின்னர், என்னை 2 ஆம் தேதி இரவு முதல் 4-ந் தேதி வரை 3 நாட்கள் அடைத்து வைத்து 4 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து என் அம்மாவிடமும், என் கணவரிடம் நடந்ததைக் கூறினேன். எனவே, என்னைக் கடத்தி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.