கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சல் பகுதியில் வசித்துவந்த ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு குழந்தைகளுக்கு தாயான கவிதா மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். தினமும் மினி பஸ்ஸில் வேலைக்கு சென்றுவந்த கவிதாவிற்கு இரண்டு மினிபேருந்து ஓட்டுநர்களின் நட்பு கிடைதுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கவிதா நான்கு பக்கத்திற்குகடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளைச்சல் காவல்துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தை ஆதாரமாக வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மினி பேருந்து ஓட்டுநர்கள் கவிதாவிற்கு காதல் தொல்லை கொடுத்துவந்தது தெரியவந்தது. சனிக்கிழமை ஓட்டுநர்கள் இருவரும் கவிதாவிற்காக பேருந்து நிலையத்திலேயே ஒருவரை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிக்கொண்டனர். இதனால் தான் அவமானப்பட்டதாக கருதிய கவிதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் பேருந்து விட்டு அவர் வீட்டுக்கு நடந்துவரும் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபொழுது கவிதாவை பின்தொடர்ந்து நடந்துவந்து ஓட்டுநர்கள் காதல் தொல்லை கொடுக்கும் காட்சிகள் இருந்ததை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக மினிபஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.