நகை வாங்குவதுபோல் நடித்து பட்டப்பகலில் 10 பவுன் தங்க செயினை இளைஞர் ஒருவர் திருடிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது நாகை வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் நாணயக்கார தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் கதிரவன் என்பவருக்குச் சொந்தமான திவ்யா ஜுவல்லரிக்கு இளைஞன் ஒருவன் தங்க செயின் வேண்டும் என்றும் அதனைக் காட்டுங்கள் என கடைக்காரரிடம் நகை வாங்க வந்தவர் போலவே கேட்டுள்ளார்.
கடை உரிமையாளரே செயின் மாடலை எடுத்துக் காட்டியுள்ளார். செயினை பார்த்துக்கொண்டே அருகிலிருந்த மோதிரத்தை காட்டுங்க பார்ப்போம்னு சொல்லியுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 10பவுன் தங்க செயினை திருடிக்கொண்டு அந்த இளைஞன் தலைதெறிக்க வீதியில் இறங்கி ஓடியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் சத்தம் போட்டுக்கொண்டு இளைஞனை பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் நகையை எடுத்துக்கொண்டு ஓடிய திருடனைப் பிடிக்க முடியாமல் அக்கம்பக்கத்தினரிடம் கூறியதோடு திருட்டு சம்பவம் குறித்து நாகை நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நகைக்கடையிலிருந்து மர்ம நபர் ஒருவர் நகைகளை திருடிக் கொண்டு ஓடும் காட்சி அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.