தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரைக் கத்தியால் குத்த வந்த 4 விசாரணை கைதிகளில் 3 பேர் தப்பி ஓட்டம். அதில் ஒருவரைக் கல்லணை பொதுமக்கள் துணையுடன் தோகூர் போலீசார் கைது செய்தனர். கல்லணையில் உள்ள தோகூர் போலீசார், கல்லணை பாலத்தில் நேற்று (05.12.2021) இரவு சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யா பிள்ளை, வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலடி பகுதியில் கல்லணை புதுப் பாலம் ஏறும் பகுதியில் ஒரு ஸ்கூட்டியில் 4 பேர் சுத்தி வந்துள்ளனர்.
அவர்களை தோகூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரனை செய்தபோது அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரனை செய்தனர். அதில் அவர்கள் பெல்டவுன் சீப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28), துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன் (21), துவாக்குடி அண்ணா வளைவு இந்திரா தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), துவாக்குடி அண்ணா வளைவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார் (21) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் லால்குடி அருகே உள்ள அரியூர் பகுதிக்குச் சென்றுவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் செல்ஃபோனை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மொபட்டில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துவந்து அய்யாபிள்ளையை தாக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக மற்ற காவலர்கள் உடனடியாக கதவை இழுத்து சாத்தியுள்ளனர். அதன் பிறகு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அய்யா பிள்ளை உயிர்தப்பினார். இந்நிலையில், தப்பி ஓடிய 4 பேரை தோகூர் போலீசார் கல்லணை பொது மக்கள் உதவியுடன் தேடிவந்தனர்.
இந்நிலையில் நரேஷ் ராஜு, காவல் நிலையத்தில் நின்ற அவர்களின் மொபட் வண்டியை எடுக்க வந்தபோது கல்லணை மக்கள் உதவியுடன் தோகூர் போலீசார் நரேஷ்ராஜுவை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். அந்த வண்டியிலிருந்து ஆடு உரிக்கும் கத்தி போல் உள்ள 3 வாள்களைப் பறிமுதல் செய்தனர். தப்பிப் போன மூன்று பேரும் இரும்பு ராடு மற்றும் வாளுடன் தப்பிச் சென்றுவிட்டனர். சம்மந்தப்பட்ட 4 பேரின் பெற்றோருக்குத் தோகூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
நரேஷ்ராஜு பெற்றோர், வினித்தின் தாய் ஆகியோர் தோகூர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடமும் தோகூர் போலீசார் விசாரனை செய்துவருகின்றனர். இதனால் தோகூர் காவல் நிலைத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடு திருடர்களால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தோகூர் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.