கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகில் உள்ளது இளையனார் குப்பம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் 25 வயதான மணிகண்டன். இவர்களின் வீட்டை ஒட்டியவாறு ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று (28.05.2021) இரவு 7 மணியளவில் பலத்தக் காற்று வீசியதன் காரணமாக மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்டிக் கடையில் வியாபாரம் செய்வதற்காக வெளிச்சம் தேவை என்பதால் மணிகண்டன் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றை ஏற்றியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விளக்கின் மூலம் அவர்களது வீட்டின் கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் டியூப் உருகியுள்ளது. பின்னர் அதன் வழியாக சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியதால் தீ வீடு முழுவதும் பரவியது. அதனால் மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டு கத்திக் கதறித் துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று பலமாக வீசியதால் வீடு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
சுற்றிலும் தீ சூழ்ந்து கொண்டதால் மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. மணிகண்டனை அங்கிருந்த பொதுமக்களால் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு வீடு முழுவதும் எரிந்து முடிந்ததும் தண்ணீரை ஊற்றி அணைத்தபடி உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கட்டிலுக்கு கீழே மணிகண்டன் உடல் கருகி நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.