பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் பிருந்தா. இவரும் அதே ஊரைச் சேர்ந்த 30 வயது டிராக்டர் ஓட்டும் டிரைவர் விக்னேஷ் என்பவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, பிருந்தாவை அவரது பெற்றோர் வெளியில் எங்கும் தனியாக அனுப்பாமல் தங்கள் குடும்பத்தினர் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூரில் தனியார் நிறுவனங்கள் பெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. அந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோரிடம் பிருந்தா கூறியுள்ளார்.
இதனையடுத்து பிருந்தாவை தனியாக அனுப்ப யோசித்த அவரது பெற்றோர், சித்தப்பா மகன் சிறுவன் சிபிராஜை பிருந்தாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிபிராஜ் தனது சகோதரி பிருந்தாவுடன் பெரம்பலூர் வந்தார். பிறகு வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு ஊருக்குத் திரும்புவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் நோக்கி இருவரும் வந்துகொண்டிருந்தனர். அப்போது இருவரையும் வழிமறித்த விக்னேஷ் காதலியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், என்னை நம்பித்தான் எனது அக்காவை அனுப்பி உள்ளனர். அதனால் அக்காவை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் உனது அக்காவை என்னோடு அனுப்பி வைத்துவிடு இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இப்படி மாறி மாறி இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, ஒரு கட்டத்தில் சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு அந்த பெண் தனது காதலன் விக்னேஷுடன் பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறிவிட்டனர். சிறுவன் தனது அக்கா எந்த பேருந்தில் ஏறினார் என்று பேருந்து நிலையத்திலிருந்த பேருந்துகளில் ஒவ்வொன்றாக ஏறிப் பார்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுவன் தனது பெற்றோருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான காதல் ஜோடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.