துபாயில் வேலை பார்த்துவரும் தந்தையிடம் மகள் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாகத் துபாயில் கூலி வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவளான ஆர்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துவருகிறார். வெளி நாட்டிலிருக்கும் தனது தந்தையிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை பேசிக்கொண்டிருப்பது ஆர்த்தியின் வழக்கம். கரோனா ஊரடங்குக்குப் பின் தினசரி காலையில் நலம் விசாரித்து வந்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி காலையும் வழக்கம்போல தந்தையிடம் செல்போனில் சார்ஜ் போட்டவாறே வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில் ஆர்த்தியின் காதில் காயம் ஏற்பட்டதோடு, வெடித்த செல்போனின் துகள்கள் ஆர்த்தியின் இரண்டு கண்களிலும் பட துடிதுடித்துக் கதறினார்.
ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த குடியிருப்புகளிலுள்ள மக்கள் ஓடிவந்து அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்குப்பின், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சைக்குப்பின் அன்று இரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்த ஆர்த்திக்கு மீண்டும் நள்ளிரவில் கண்வலி அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலமாகத் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உறவினர்.
இதுகுறித்து ஆர்த்தியின் உறவினர் ஒருவரிடம் விசாரித்தோம், "சமீபத்தில் அரேபிய, வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு குறித்த பேச்சுகள் அடிபட்டுவருவதால் வீடியோ காலில் தந்தையிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஆர்த்தி. ஏப்ரல் 26 அன்று இரவு முழுவதும் மின்வெட்டு. செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்ததால் மறுநாள் ஒன்பது மணிக்கு கரண்ட் வந்ததும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆர்த்தி, அப்படியே சார்ஜ் போட்டபடியே தனது தந்தையிடம் பேசத்தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்போன் வெடித்து ஆர்த்தியின் முகத்தைச் சிதைத்து விட்டது...'' என்கிறார் வேதனையுடன்.
மிகக் குறுகிய காலத்தில் செல்போன் இளைய தலைமுறையின் மீது செலுத்திவரும் அதீத தாக்கம் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய இணைய வசதியுடனான செல்போனே பயன்படுகிறது. ஜூம் மீட்டிங்குகள், ஆபிஸில் அனைவரும் கூடிப்பேசும் வசதியை நிவர்த்தி செய்கிறது. செல்போன் வழங்கும் வசதிகளை அத்தனை எளிதாய்ப் பட்டியலிட்டுவிட முடியாது. அதேசமயம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக்கூடாது என்பது எளிய பாதுகாப்பு விதி.
இரவெல்லாம் மின்வெட்டு செய்யப்பட்டிருந்ததும், பகலில் மின்சாரம் வந்ததும், வோல்டேஜ் ஏற்ற இறக்கமும் தந்தையுடன் பேசும் ஆர்வமும் ஒரு பெண்ணின் கண்களுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது. நமக்கென்ன ஆகப்போகிறது… என சார்ஜ் போட்டபடியே பேசுபவர்களே, கண்கள் மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம்... உஷார்!