Skip to main content

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா

தமிழக ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை படு மோசமாக நிர்வாகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பாஜக அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வீரமரணமடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி மற்றும் காயமடைந்துள்ள ஆய்வாளர் முனிசேகர் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோருகிறேன் vd மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் நகைக்கடை கொள்ளையில்,ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்ற சென்னை மாநகர காவல்துறையின் தனிப்படை கொள்ளையர்களை மடக்கி பிடித்தது.அப்போது ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் துன்பத்தையும்  அளிக்கிறது.

கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது தனது இன்னுயிரை நீத்து வீரமரணமடைந்துள்ள பெரிய பாண்டியின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த பொறுப்புணர்வுடனும் கடமையாற்றிய ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றியவர் ஆய்வாளர் பெரிய பாண்டி. அவரது அகால மரணம் தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
 
ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், அவரின் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகருக்கு உயர்தர மருத்துவ சிகிக்சையையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஆய்வாளர் முனிசேகர் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக நமது ஆய்வாளர் பெரிய பாண்டியின் வீரமரணம் அமைந்துள்ளது. பசு குண்டர்களால் பெஹ்லு கான் என்ற பால் பண்ணை உரிமையாளர் தொடங்கி கடந்து வாரம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் அப்ராசாலுல் கான் என்ற 47 வயது கூலித் தொழிலாளி வரை தொடரந்து வன்முறை கும்பல்களால் ராஜஸ்தான் மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் உச்சபட்சமாக தனது கடமையை நிறைவேற்றிய ஆய்வாளர் பெரிய பாண்டி கொல்லப்பட்டுள்ளார். 

கடந்த ஜீன் மாதம்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்திலிருந்து 50 பசு, காளை மற்றும் கன்று குட்டிகளை வாங்கி 5 சுமை ஊர்ந்துகளில் உரிய ஆவணங்களுடன் தமிழகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது அவர்களது ஊர்தியை தீ வைத்துக் கொளுத்த வன்முறை கும்பல் முயன்றது. இதில் தமிழக கால்நடை துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் என். அரவிந்த்ராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் பாலமுருகன் மற்றும் கருப்பைய்யா ஆகியோர் மிக கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை படு மோசமாக நிர்வாகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பாஜக அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வீரமரணமடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி மற்றும் காயமடைந்துள்ள ஆய்வாளர் முனிசேகர் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோருகிறேன்.
 
இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்