நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சாலையில், நேற்று முன்தினம் (27.09.2024) கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிய வந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் இருவர் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அதோடு ராஜஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை நேற்று (28.09.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட ஐந்து பேரை அக்டோபர் 10ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க குமாரபாளையம் குற்றவியல் நீதிபதி மாலதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளன. அதாவது பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து கயிறுகளைக் கொண்டு கொள்ளையர்களின் கைகளைக் கட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில், காவலர்களுக்கு உதவியாகப் பொதுமக்களும் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த கொள்ளையன் அசார் அலி மேல் சிகிச்சைக்காகக் கோவை அழைத்துச் செல்லப்பட்டார். எனவே கோவை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் அசார் அலியை போலீசார் இன்று ரிமாண்ட் (29.09.2024) செய்ய உள்ளனர்.