Skip to main content

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’- இந்தியா கூட்டணியின் கையில் பாஜகவின் குடுமி! 

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
India alliance is needed for implementation of One nation One Election

பாஜகவின் கனவுத் திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை  ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த குழு 191 நாட்களில் 65 கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. இப்படியாக மொத்தம் 21,588 கருத்துகள் பெறப்பட்ட நிலையில், 80 சதவீத கருத்துகள் ஒரே நாடு  ஒரே தேர்தலுக்கு ஆதரவாக இருந்துள்ளது. 47 அரசியல் கட்சிகளில் 32 அரசியல் கட்சிகள் ஆதரவாகவும், 15 அரசியல் கட்சிகள் எதிராகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஓரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம்  ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. தற்போது அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன் முடிவுகள் வெளியான 100 நாட்களில் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், 3 தேர்தல்களுமே ஒரே வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெற வேண்டும்’ என்பது இந்த அறிக்கையின் சாரம்சம்.

இது தொடர்பான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், 50 சதவீத மாநிலச் சட்டசபையின் ஓப்புதல்களும் தேவை.  அதன்படி மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 362 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 69 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதேபோன்று மாநிலங்களையில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 156 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் பாஜக கூட்டணிக்கு 126 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் இங்கேயும் பெரும்பான்மைக்கு 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்வதால் ஒரே நாடு ஒரே தேர்தலுக்குத் தேவையான 50 சதவீத மாநிலச் சட்டசபையின் ஒப்புதல் கிடைத்துவிடும்.  ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்பட வேண்டும் என்றால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவிற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்றே தெரிகிறது. அப்படி கிடைக்கவில்லை என்றால் பாஜகவின் கனவுத் திட்டம் கலைந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.