தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 4 பேர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அதாவது திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர்.
அதோடு தமிழக அமைச்சராக இருந்த 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான், சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலாண்மைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பால்வளத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ள ராஜகண்ணப்பனுக்கு, காதி மற்றும் கிராம தொழில்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு, நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு இன்று (29.09.2024) மாலை 03:30 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள நிகழ்வில் இந்த பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.