தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (07/01/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடு கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் கட்டடமற்ற இதரபணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.
பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமுமின்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலைப் பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும். தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, தற்பொழுது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியை, தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய ஆன்லைன் வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்." இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.