சென்னை தி.நகரில் தனியார் வங்கி ஊழியருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கியில் திடீரென மதியம் 12 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் உள்ளே பணியில் இருந்த தினேஷ் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். வெட்டும் பொழுது 'உன்னால தாண்டா என் வாழ்க்கையை வீணாப் போச்சு' என கத்தியபடி தாக்கியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர் புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. தாக்குதலுக்கு உள்ளான தினேஷும் தாக்கிய சதீஷும் ஏற்கனவே நந்தனம் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் 2 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். அப்போது சதீஷ் சரியாக பணியாற்றவில்லை என தினேஷ் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சதீஷை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. அதன் பின்னர் தினேஷ் அந்த வங்கியில் இருந்து வேலையை மாற்றிக் கொண்டு தி.நகரில் செயல்பட்டு வரும் வங்கியில் பணியாற்றியுள்ளார். ஆனால் வெளியேற்றப்பட்ட சதீஷ் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் சுற்றி வந்துள்ளார். இதனால் தன்னுடைய வேலை போனதுக்கு தினேஷ்தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்த சதீஷ், வங்கிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.