திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, செட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(45) என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அப்படி பெற்ற பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திருப்பி கொடுக்காததால் வெள்ளையம்மாள் தனது நண்பரான பச்சைமுத்துவின்(45) உதவியுடன் ராமலிங்கத்தின் 15 வயது மதிக்கத்தக்க இளைய மகன் பால் ஊற்றுவதற்காக தனது டூவீலரில் வந்தபோது, அவரை வழிமறித்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறித்து வைத்துக்கொண்டுள்ளார். மேலும், பணத்தை தருமாறு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமலிங்கம் நேற்றிரவு தனது இரு மகன்களுடன் சென்று டூவீலரை தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பச்சைமுத்து ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து ராமலிங்கத்தை வெட்டவந்தார். இதை தடுக்க வந்த 15 வயது மதிக்கத்தக்க அவரின் இளைய மகன் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்தச் சிறுவனை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், இதில் காயமடைந்த பச்சைமுத்துவுக்கும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.