சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான ஏற்காட்டில் 44வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 31, 2019) தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவை, மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன், மலர்க்கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு ஐந்து நாள்கள் இவ்விழா நடத்தப்பட்டது. மக்களவை தேர்தல் காரணமாக, வி-ழா தொடங்க தாமதம் ஆனதோடு, விழா நடைபெறும் நாள்களும் குறைக்கப்பட்டது. எனினும், சிறப்பான மலர் அலங்காரங்கள் குறைவின்றி செய்யப்பட்டு இருந்தன.
அண்மையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சிறப்பு செய்யும் வகையில், மலர்க்கண்காட்சியில் அவருடைய கட்அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகே, சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா பூக்களால் ஆன மிக்-21 ரக போர் விமானத்தின் சிற்பமும் செய்யப்பட்டு இருந்தது. அது, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ள நிலையில், அதை நினைவூட்டும் வகையில் உலகக்கோப்பையையும் மலர் சிற்பமாக வடித்திருந்ததும் பலரையும் கவனிக்க வைத்தது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சென்னையில் உள்ள மத்திய ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு பெருமை சேர்க்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்களால் சிற்பமாக ரயில் நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அந்த ரயில் முன்பு நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அண்ணா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மா, பால, வாழை என முக்கனிகள் மட்டுமின்றி, அன்னாசி, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு கனிகளைக்கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.
தோட்டக்கலைத்துறை சார்பில் தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள், மலர்கள், தோட்டப்பயிர்கள், மருத்துவ பயிர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும், பல்வேறு கனிகளால் ஆன விலங்குகள், பறவைகளும் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
வழக்கம்போல் ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படு உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கிராமிய கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், செல்லப்பிராணிகள் போட்டி, புகைப்பட போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு சில நாள்களே உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் இந்தாண்டு குறைவாக இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றதால், ஏற்காடு கோடை விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் வராததால் மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இதனாலும் கோடை விழா வழக்கமான உற்சாகமின்றி, களையிழந்து காணப்பட்டது.
.