Skip to main content

மாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் ஜங்ஷனில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள் செல்வம்- கீதா தம்பதியர். தனது கடையில் எழுத்தாளர் ஜெயமோகன் தோசை மாவு வாங்கியதாகவும், பின்னர் அந்த மாவு சரியில்லை என்று கொடுக்க வரும்போது, தோசை மாவை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கீதாவின் சேலையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார் ஜெயமோகன். 
 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம் தடுக்கசென்றபோது அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் காயமடைந்த கீதா இரவு 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வந்த நேசமணி நகர் போலீசார் கீதாவை விசாரித்து வாக்குமூலம் பெற்று கொண்டனர். அதன் பிறகு கீதா கொடுத்த புகாரின் மேல் போலீசார் எப்ஐஆர் போடவில்லை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

 

jeyamohan


 

ஆனால் இரவு 11.30 மணிக்கு  மருத்துவமனையில் வந்து சேர்ந்துகொண்டு ஜெயமோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்வத்தின் மீது இரவோடு இரவாக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு செல்வம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்  என்றும் கீதா கூறியிருக்கிறார். 
 

இதுகுறித்து செல்வத்தின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் விசாரிக்கும்போது எழுத்தாளர், பிரபலமானவர் என்றும் அவர் கமலஹாசனின் நண்பர் என்றும் அவருக்காக முன்னாள் கவர்னர் ஒருவர் மேலும் ஆர் எஸ் எஸ் அமைப்பைசேர்ந்த பலரும் போன் செய்து துரித நடவடிக்கை எடுக்க கூறுவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கீதாவின் வழக்கறிஞர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 
 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் ஜென்ஷனில் கீதா என்கிற பெண்மணி மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை ஜெயமோகன் என்ற எழுத்தாளர் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். திரும்ப வந்து மாவு புளிப்பாக இருக்கிறது வேறு மாவு வேண்டும் என்று மாற்றி கேட்டுள்ளார். இவர்களும் மாற்றி தருவதாக கூறியுள்ளனர். 

கடைக்குள் இருந்த கீதா மீது தான் வைத்திருந்த தோசை மாவை தூக்கி எறிந்துள்ளார். அவர் ஏதோ குடிபோதையில் இருந்திருப்பார் போலிருக்கிறது. அப்போது கடைக்குள் கீதாவின் கணவர் செல்வம் இருந்துள்ளார். மாவை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது கைகலப்பாகி இருக்கிறது. கடையில் இருந்த கீதாவையும் தாக்கியுள்ளனர். 
 

கீதா தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் அடிப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் கீதா அளித்த புகாரில் எப்ஐஆர் போடவில்லை.
 

ஆனால் அதன் பிறகு 12 மணிக்கு மேல் ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு பிறகு புகார் கொடுக்கப்பட்டு மேலிடத்தின் அழுத்ததின் காரணமாக எப்ஐஆர் போட்டு கீதாவின் கணவரை கைது செய்துள்ளனர். 
 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளோம். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். கீதா கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மகளிர் ஆணையத்திலும் மனு கொடுக்க உள்ளோம். 
 

உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக போலீசார் கீதா கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லையா?
 

அவர் (ஜெயமோகன்) நாடக ஆசிரியர் என்பதால் மேலிடம் வரை செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த செல்வாக்கை பயன்படுத்தி கீதாவின் கணவரை கைது செய்துள்ளனர். நாங்கள் கோர்ட்டில் மனு அளித்துள்ளோம். அந்த பெண் கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்ஐஆர் போடவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றார். 


ஜெயமோகன் புகார்


தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்று, வீட்டிற்கு சென்று பார்த்தபோது மாவு காலாவதியானது என தெரியவந்ததால், அதை திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, கடைக்கார பெண்மணி தன்னை திட்டியதாகவும், அந்தப் பெண்ணின் கணவர் தன்னை தாக்கியதாகவும், பின்னர் அந்த மளிகைக் கடைக்காரர் தன் வீட்டருகே வந்து தகாத வார்த்தையில் பேசியதாகவும் ஜெயமோகன் புகார் தெரிவித்துள்ளார். 
 

சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் இடமும் விசாரித்தபோது, பிரபலமானவர், எழுத்தாளர் என்பவருக்கு பொது இடத்தில் பெண்களிடத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்பது தெரியவில்லையே என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இது போன்றவர்களை ஆதரித்தால்  சாமான்ய மக்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி கிடைக்குமா என்று குமுறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்