டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது.