தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா ‘பிளாஷ்டிக் எனும் எமன்’ என்னும் விழிப்புணர்வு கையேடு வழங்குதல் மற்றும் துணிப்பை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடையே மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், "2023 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வதற்கு உரியத் தீர்வுகள்' ஆகும். இந்த கருப்பொருளை வலியுறுத்தும் விழிப்புணர்வுபடி நாம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, பிளாஸ்டிக் மாசு ஏற்படாமல் காக்க வேண்டும். சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி மேலும் மேலும் இந்த பூமியில் `சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்குத் தான் ஆபத்து விளைவிக்கும்.
சுற்றுச்சூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இந்த சம நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி முன்னோர் வழிபட்டதால், அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்" என்றார்.
தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் மாணவர்களிடையே பிளாஸ்டிக் தீமை குறித்தும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து நீர்நிலைகளில் மண்டிக் கிடக்கும் நெகிழிகள், சிற்றுயிர்கள் தொடங்கி பேருயிர்கள் வரை ஏற்படுத்தும் தீங்குகளை எடுத்துரைத்து நெகிழிப் பயன்பாடுகளின் பெருந்தீமை குறித்து உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஆர்.கே. ராஜா, சாத்தனூர் குமரன், ஆசான் கார்த்திக், சந்தியா, ஹேமா, சர்மிளா, அகிலா உள்ளிட்ட சிலம்பம் மாணவர்கள் பங்கேற்றனர்.