ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இறுதிப் போட்டி இன்று (19-11-23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்த ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பெருநகரங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு உலகக் கோப்பை போட்டியை ரசிகர்களுக்கு திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இரண்டு இடங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரலையில் காண்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பெரிய அளவிலான எல்இடி திரை அமைக்கப்பட்டு வருகிறது. 28 அடி அகலம் 10 அடி நீளத்தில் திரை அமைக்கப்பட்டு வருகிறது. போட்டி நேரலையை காண ரசிகர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது.