
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா திருச்சி தேசியக் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் துணை முதல்வருமான முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இரா. சுந்தரராமன் தலைமை உரை வழங்கினார்.
பள்ளிக் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்கான முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். அறிவழகன் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியில் வெற்றிபெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
மேலும் அவர், “சாதனைகளும் சரித்திரங்களும் தங்கள் பக்கங்களை இளைஞர்கள் நிரப்புவதற்காக காத்துக் கிடக்கும்போது; இளைய சமுதாயம் போதையின் பாதையில் சிக்கிவிடக்கூடாது. தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஒற்றையடிப் பாதையில் மட்டுமே தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். தொடர்ந்து, ‘எதிர்கால தமிழ்நாடு’ என்ற அமைப்பினுடைய நிறுவனர் ஆஷிக், நூற்றுக்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் பங்கேற்கும் கருத்துச் சித்திரத்தை வெளியிட்டார்.
ஓவியப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு நடுவர்களாக சிறப்பித்த ஜெயஸ்ரீ, நடராஜன், மனோஜ், ஷேக் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.