நடுநிசி நேரத்தில் தனியாக நடந்து சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர சம்பவம், கொடைக்கானல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள காபி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு நேரத்தில், கண்ணன் வழக்கம்போல் தனது வேலையை முடித்துக்கொண்டு கையில் காபி மூட்டையுடன் நடந்தே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, அந்த இரவு நேரத்தில் தனியாக வந்துகொண்டிருந்த கண்ணனுக்கு, அவருக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பதற்றமடைந்த கண்ணன், பொறுமையாக பின்னால் திரும்பி பார்க்கும் நேரத்தில், அங்கு மறைந்திருந்த காட்டு மாடு ஒன்று திடீரென எதிர்பார்க்காத வேளையில், கண்ணனை கொடூரமாகத் தாக்கியுள்ளது.
மேலும், இதில் படுகாயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் பரிதவித்துக் கொண்டிருந்த கண்ணன், உதவிக்கு யாராவது வருவார்களா? எனக் கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த சமயம், புனித அக்யூனாஸ் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளான பாக்யராஜ், உதயகுமார், ஜோசப் உள்ளிட்ட சிலர் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கண்ணனின் அலறல் சத்தம் கேட்ட அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கண்ணனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகிகள், அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காட்டு மாடுகளால் தாக்கப்பட்ட கண்ணன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வன விலங்கால் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய புனித அக்யூனாஸ் பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.